NeoCounter

NeoCounter

Monday, January 9, 2012

பெயர் சொல்லும்

பெயர் சொல்லும் பிள்ளை உண்டு. அதென்ன பெயர் சொல்லும் வடை? உங்களுக்குத் தெரிந்த பலகாரங்களின் பெயர்களை ஒருக்கால் நினைத்துப் பாருங்கள். எந்தப்பலகாரமாவது உங்கள் ஊரின் பெயர் சொல்கிறதா? ஆனால் தட்டை வடை என் பெயர் சொல்லப்படும் வடை மட்டும் பருத்துறை வடை என்று ஊரின் பெயர் சொல்லி நிற்கிறது.

சில வகை உணவுப் பொருள்களுக்கு சில ஊர்கள் பிரபலமாக இருப்பதுண்டு தான். ஆனால் எந்த உணவுப்பொருளும் அந்த ஊரின் பெயர் சொல்லி நிற்பதில்லை. பருத்துறை வடை மட்டும் இதில் விதிவிலக்கு.  பொறிவிளாங்காய், உழுத்தம் பலகாரம், பகோடா, முறுக்கு என்று வடமராட்சியில் பல விதமான சிற்றுண்டிகள் பெயர் பெற்றிருந்தாலும் தட்டவடை மட்டும் ஊரின் பெயர் சொல்லி நிற்கின்றது. அரைக்கப்பபடாத உழுந்துடன் ,பெருஞ்சீரகம், மிளகாய்தூள், மா, உப்பு சேர்த்து தயாராகும் பருத்துறை வடை,எவருடைய நாவையும் ஊறவைக்கும் சுவையுடையது.மூன்று தசாப்த கால போரினால் அதிகளவு கவனிப்பாரற்று இருந்த இந்த வடைக்கு , போருக்கு பின்னான இன்றைய சுறுசுறுப்பான யாழ்ப்பாணத்தில் மீண்டும் கிராக்கி அதிகரித்துள்ளது.

“இப்ப தான் நாங்க செய்து கொண்டிருக்கிற பருத்துறை வடையால வருமான் அதிகம் கிடைக்குது. முன்பு இதிலை அதிக ஆதாயம் கிடைக்கேல்லை. ஏ9 பாதை திறந்த பிறகு வெளிநாட்டால் வருபவர்களும் , கொழும்பு மற்றும் ஏனைய இடத்தில் இருந்து வாறவையும் நிறையத்தேடி வருகினம். இதாலை இப்ப வருமான் கூடியிருக்குது” என்று மகிழ்கிறார் பருத்துறை வடை சுட்டு விற்று வரும் பருத்துறையைச் சேர்ந்த க.ரதி என்ற பெண்மணி. 1987ம் ஆண்டு லிபறேசன் ஒபிறேசன் இராணுவ நடவடிக்கை ஆரம்பிப்பதற்க்கு முன்பிருந்தே இவர் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

பக்கற் செய்தே இந்த வடைகள் சந்தைக்கு அனுப்பப்படுகின்றன. பைக்கற் ஒன்றில் 15 வடைகள் போட்டு 45 ரூபாவுக்கு கொடுக்கின்றார்கள். கடைகளில் அவை 50-60 ரூபா வரையில் விற்பனையாகிறது. திருமண வைபவங்கள் மற்றும் ஏனைய விஸேசங்கள் எனின், 100 வடை 150 ரூபாவுக்கு விற்று கொடுக்கின்றார்கள். “ஒரு நாளைக்கு குறைந்தது 1 கிலோ உழுந்;திலாவது வடை சுடுவம். இதில 400 வடை கிடைக்கும். ஒரு நாளைக்கு1200 ரூபா வரையில் கிடைக்குது. 900 ரூபா செலவு போக 300 ரூபா மிஞ்சும்” என்கிறார் அந்த பெண்மணி.

இது வடையின் கதை .இந்த வடையை சுட்டு சீவிக்கும் ரதிக்கு தனிக்கதை இருக்குதென்பது அவரோடு பேச்சுக் கொடுத்த போது தெரிந்தது. “வடைவித்து வாற 300 ரூபாவை கொண்டு தான் நாங்கள் சீவியம் நடாத்துகிறம். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. கணவர் பிள்ளைகள் பிறந்தவுடனேயே என்னைத் தனியே விட்டுப் போய் வேற திருமணம் செய்து விட்டார்”  என்று தனது சோகக் கதையை கூறு ஆரம்பித்தார்.
                     “ஆரம்பத்தில் ரொம்பக் கஸ்ரப்பட்டன். இப்பதான் இந்த தொழில் மூலம் ஓரளவு நிம்மதி கிடைச்சிருக்கு. 9ம் ஆண்டும் 7ம் ஆண்டும் படிக்கும என்ர பிள்ளையளுடைய படிப்பு மட்டுமில்லை, என்ர அம்மா ,தங்கைமார்  மூன்று பேரும் என்னோடதான் இருக்கினம். நாங்கள் எல்லோருஞ் சேர்ந்து தான் இந்தத் தொழிலை செய்யிறம்” என்று முடித்தார். 48 வயதாகும் இந்தப் பெண்மணி ,8 வயதிலேயே தன் தந்தையாரை இழந்து , தாயின் அரவணைப்பிலேயே வளர்த்துள்ளார். மந்திகை வைத்தியசாலையில் வேலை செய்து தமது தாயார் தன்னையும், தன்னுடைய ஏனைய 6 சகோதரர்களையும் வளர்த்ததாகப் வளர்த்ததாகப் பழைய நினைவுகளையும் பகிர்கின்றார் அவர். வீட்டில் மூத்த பிள்ளையாகப் பிறந்த ரதி, குடும்பச் சுமைகள் காரணமாகப் பாடசாலை செல்லவில்லை. இப்போது கணவராலும் கைவிடப்பட்டு, தனது தாயையும், மூன்று சகோதரிகளையும் வைத்துப் பராமரிதற்க்கு அவருக்குக் கைகொடுப்பது இந்தப் பருத்துறை வடைதான்.
                    ‘பெயர் சொல்லும வடை’  இவர்களின் வாழ்வையும் உயர்க்கு இட்டுச் செல்லட்டும்.


0 comments:

Post a Comment