தமிழ் பத்திரிகைத்துறையும் அதன் தேவையும்
‘ஆயிரம் ஏவுகணைகளால் சாதிக்க முடியாத ஒரு காரியத்தை சாதிக்கும் திறைமை கொண்ட ஒரு துறையே ஊடவியல் துறையாகும். இத்தகைய வல்லமை கொண்ட இத் துறையில் இன்று அடியெடுத்து வைப்பவர்களின் வாழ்க்கையோ கத்தி முனையில் வாழ்வா? சாவா? என இரண்டுக்கும் நடுவே போராடும் போராட்டமாகி விட்டது.
ஜனநாயகத்தின் 4வது தூண் என வர்ணிக்கப்படும் ஊடத்துறையானது மக்களை பற்றியே மக்களுக்கு அறிவிப்பது மட்டுமல்லாது பிழைகளை சுட்டிக்காட்டி உலகத்தை உலகுக்கு உள்ளவாறே எடுத்துக்காட்டும் ஒரு துறையாக உள்ளது. இத்துறையில் அச்சுத்துறையானது ஏனைய துறைகளுடன் மாறுபட்டு விளங்கும் அதே வேளை விசேடமான ஒரு துறையாகவும் உள்ளது. இது மக்களின் குரலாகவோ அல்லது அவர்களது உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்ற அதே வேளை பாமர மக்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய மொழிநடையில் குறைந்த செலவுடையதாகவும் எல்லா இடங்களிலும் கொள்ளனவு செல்லக்கூடியதாகவும் அமைந்துள்ளதால் இது எல்லோரிடத்திலும் ஒரு தனித்துவத்தை தனதாக்கிக் கொள்கின்றது. இதன் காரணமாகவே இத் துறை எப்போதும் பல எதிர்ப்புகளையும் ,எதிர் வினைகளையும் தனதாக்கிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரையில் எந்த ஒரு ஊடகத்துறையாயினும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகவே செயற்படல் வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இல்லையெனில் அடக்கு முறையென்னும் கரத்தினுள் அகப்பட்டு சிதைபடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான். இந்நிலையில் தமிழ் ஊடகவியல் துறையானது மூன்று தசாப்த கால யுத்தத்தில் பல பின்னடைவு களையே சந்தித்திருந்தது. அதாவது பல உயிரிழப்புகள் ,பொருட்சேதம் ,அச்சுறுத்தல்கள் என பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ளமையால் இன்று நாட்டில் பல ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இல்லாமலேயே போய் விட்டனர். இந் நிலையே யுத்தம் முடிவடைந்தும் இன்று வரை இலங்கையில் தொடர்கதையாக உள்ளது.
ஒரு நாட்டின் ஜனநாயகமானது சமமாகவும் சமத்துவத்துடனும் பேணப்படுகின்றது என்பதை ஆதாரப்படுத்தும் ஆதாரங்களில் ஒன்றாக ஊடகவியல் துறையானது காணப்படுகின்றது. நம் நாட்டில் ஊடக சுதந்திரம் பற்றிய சட்டதிட்டங்கள் கொள்கைகள் காணப்படுகின்ற போதும் தமிழ் ஊடகங்களுக்கு சுதந்திரம் என்பது போருக்கு முன்பும் சரி இன்றும் சரி எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ் ஊடகவியல் துறையானது யுத்ததின் போது உயிரால் உடலால் உள்ளத்தால் சிதறடிக்கப்பட்ட மக்களை உறவுகளோடு சேர்த்து வைப்பதிலும் அநாதைகளாய் தவிர்த்த பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் உதவிபுரிய தாமாகவே முன்வந்தோரை இனங்காட்டி உதவி புரியச் செய்யும் கருணைப்பாலமாய் துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் நண்பனாய் நல்லதைக் சொல்லிக் கொடுக்கும் ஆசானாய் செயற்பட்டு வந்தன என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
ஆனால் தற்காலத்தில் மக்களின் தேவையும் எதிர்பார்ப்பும் மாறுபட்டதாகவே உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்படும் மாற்றங்களினை இனங்கண்டு செயலாற்ற வேண்டிய ஒரு கட்டாய நிலை உள்ளது. போரின் போது அல்லல் பட்ட சமூகமானது தனது அன்றாட தேவைகளினை பூர்த்தி செய்வதற்காக அமைதியையும் நிலையான இருப்பிடத்தையும் தமது உயிரினையும் பாதுகாத்துக் கொள்வதினையே நோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். இதனால் பொருளாதாரம் , பொழுது போக்கு என்பன மக்களுக்கு அவசியமான ஓன்றாகி விட்டது .இம் மாற்றத்தினால் ஒரு குறுகிய காலத்தில் இன்று தமிழர் பண்பாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. கால நீரோட்டத்தில் மாற்றங்கள் வருவது இயல்பே. ஆனால் அதன் தனித்துவம் அழிவடையாமல் பாதுகாக்க ஊடகங்கள் முன்னின்று செயலாற்ற முடியும். இதற்க்கு இன்று ஊடகங்கள் அனைத்தும் தமக்குள் ஒரு இணக்கப்பாட்டை உருவாக்கி தமது கொள்கை ரீதியில் ஒருமித்த செயற்பாட்டை கொண்டிருப்பது அவசியமாகின்றது.
இதனால் மக்கள் மத்தியில் ஒரு நடு நிலையான கருத்தை உருவாக்குவதிலும் இதனை வளர்த்தெடுப்பதிலும் பொது நலனில் ஆர்வமுள்ள இளம் சமுதாயத்தை உருவாக்கவும் முடியும். எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையுமே மட்டும் மக்களிடையே ஏற்படுத்தாது ஊடகங்கள் எடுத்துச் செல்லும் விடயம் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இருத்தல் வேண்டும்.
எந்த ஒரு நெருக்கடி வந்தாலும் இதனை தயங்காமல் தணிக்கை செய்யாமல் உள்ளதை உள்ள படியே வெளியிடும் ஊடகங்களே மக்க ளிடத்தில் நிலை பெற்று இருப்பனவாக உள்ளன. இதனால் சில தமிழ் ஊடகங்கள் இன்றும் இம்முறையை பின்பற்ற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளன . இன்று செய்தியாக எழுதப்படுபவை நாளைய சரித்திரங்களாக பதியப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களுடைய நிலையானதும் உண்மையானதுமான சரித்திரத்தை தடம்பதிப்பிக்க செய்வது இன்று தமிழ் ஊடகங்களின் கைகளிலே..



.jpg)

.jpg)
.jpg)















